இறையச்சம்
இறையச்சம் வாரி வழங்கச் சொல்வதற்கு இஸ்லாம் வகுத்துள்ள அந்த இலக்கணத்திலும் அர்த்தம் உள்ளது.
செல்வத்தில் சொத்து சுகத்தில் ஆசை இருக்கும் போதே செலவு செய்வது தான் நன்மையான காரியம் ஆரோக்கியத்தடனும் திடகாத்திரத்துடனும் செல்வத்தை அனுபவிக்கும் நிலையிலும் இருக்கும் போது செய்யப்படும் தர்மமே நன்மை தரக்கூடியது.
படுக்கையில் வீழ்ந்து, திரட்டிய செல்வத்தை அனுபவிக்க இயலாத நிலைக்குச் சென்று யாருக்காகச் செல்வத்தைத் திரட்டினானோ அவர்களை அந்தச் செல்வமே தறுதலைகளாக மாற்றியதைக் காணும் நேரத்தில் அவர்களால் அலட்சியப் படுத்தப்பட்டு ஆசையுடன் கட்டியபங்களாவின் வராந்தாவில் நாற்றமெடுத்த ஆடையுடன் நாட்கணக்கில் போடப்பட்டு மலஜலத்தில் புரண்டு உறவினர்களால் '' கிழம் எப்போது சாகும் '' என்று எதிர்பார்க்கப்படும் நேரத்தில் தர்மம் செய்வதில் நன்மை இல்லை . இதில் எந்த தியாகமும் இல்லை.
இந்த நிலையெல்லாம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அந்த நிலை ஏற்படுவதற்கு முன்பாக செல்வத்தில் பேராசை இருக்கும் நேரத்திலேயே செல்வத்தை வாரி வழங்குங்கள் என்று இஸ்லாம் போதிக்கின்றது.
செல்வந்தனாவதற்கு ஆசைப்பட்டு , வறுமை ஏற்படுமோ என அச்சங்கொண்டு ஆரோக்கியமானவனாக இருக்கும்போது செய்யும் தர்மமே சிறந்த தர்மம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
நீங்கள் விரும்பக் கூடியதைச் செலவிடாதவரை நீங்கள் நிச்சயம் நன்மையை அடைய முடியாது . அல்குர்ஆன் 3:92
(நல்லவர்கள்) உணவில் விருப்பம் இருந்தும் அதை ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் , கைதிகளுக்கும் வழங்குவார்கள். நாங்கள் அல்லாஹ்வின் திருமுகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து நன்றியையோ , பிரதிபலனையோ நாங்கள் எதிர் பார்க்க வில்லை. ( என்றும் கூறுவார்கள்) அல்குர்ஆன் 76:8
தமக்க வறுமை இருந்தாலும் தம்மை விட மற்றவர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். அல்குர்ஆன் 59:9
கடவுளை மறந்து விட்டு மனிதனை நினைக்க வேண்டும் என்ற வரட்டுத் தத்துவத்தை விட கடவுளை நினைத்து அவன் கட்டளைக்குப் பணிந்து மனிதனையும் நினைப்பது அதிகப் பயனுள்ளதாகும் . மனிதனை நினைக்கச் சொல்லும் நாத்திகர்களை விட கடவுளையும், மனிதனையும் நினைக்கும் முஸ்லிம்கள் பல்லாயிரம் மடங்கு வாரி வழங்குவதை நடைமுறையிலும் நாம் கான்கிறோம். தன்னுடைய செல்வம் இறைவனால் தரப்பட்டது. அவனது கட்டளைப்படி வாரி வழங்குவது தனது கடமை என்று முஸ்லிம்கள் நம்புவதே
இதற்கு காரணம். நியாயத் தீர்ப்பு நாளில் இறவன் செல்வந்தர்களை விசாரிப்பான். அப்போது நான் ஆடையின்றி உன்னிடம் வந்தபோது எனக்கு ஏன் நீ ஆடை தர வில்லை என்று கேட்பான் அதற்கு செல்வந்தன் இறைவா! நீயோ தேவையற்றவன் உனக்கு எதற்கு ஆடை ? நீ எப்போது என்னிடம் ஆடை கேட்டாய் ? என்று கேட்பான் அதற்கு இறைவன் ஒரு ஏழை ஒரு நாள் உன்னிடம் ஆடை கேட்டு வரவில்லையா ? என்று திருப்பிக் கேட்பான். மேலும் நான் பசியுடன் உன்னிடம் வந்தபோது எனக்கு ஏன் உணவளிக்க வில்லை என்பான் . அதற்கு மனிதன் இறைவா நீயோ எந்தத் தேவையுமற்றவன் உனக்கேது பசி என்பான் அதற்கு இறைவன் ஒரு ஏழை உன்னிடம் உணவு கேட்டு வந்தபோது அவனை நீ விரட்ட வில்லையா? என்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ( ஹதீஸின் கருத்து )ஏழைகளுக்கு வழங்குவதைத் தனக்கு வழங்குவதாகக் கருதக் கூடியவன் எல்லாம் வல்ல ஏக இறைவன் . இத்தகைய இறைவனை இஸ்லாம் தவிர எந்த மார்க்கமும் கூறவில்லை.
மனிதர்களின் நலனில் மனிதனை விட அதிகம் அக்கறை செலுத்தக் கூடிய இறைவன் என்பதால் தான் மனிதர்களுக்கு வழங்குவதையும் தனக்குச் செய்யும் கடமைகளில் ஒன்றாக ஆக்கியுள்ளான். இஸ்லாம் அதன் போதனைகள் எவ்வளவு அர்த்தம் நிறைந்தது என்பதற்கு இது தெளிவான சான்றாக அமைந்துள்ளது
யாருக்குச் செலவிட வேண்டும் எந்த வரிசைப்படி அது அமைய வேண்டும் என்பதற்கு இஸ்லாம் கூறும் இலக்கணமும் அர்த்தம் நிறைந்தது.ஊருக்கு தானம் செய்வதற்கு முன் உறவினர்களுக்குத் தானம் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.
உறவினர்கள் முன்னிலைப் படுத்தப் பட்டதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
ஒவ்வொரு மனிதனும் தனது உறவினர்களின் உண்மையான நிலவரத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும். யாரெனத் தெரியாதவர்களின் உண்மை நிலையை அவ்வளவு எளிதில் அறிய முடியாது . பலரிடமும் யாசித்து செல்வத்தை அதிகரிக்க எண்ணுவோர் யாசிப்பவர்களில் இருக்கக்கூடும்.
ஒவ்வொருவரும் தத்தமது உறவினர்களுக்கு வழங்கினால் யாசிப்போர் இருக்க மாட்டார்கள்.
அறியாதவர்களுக்கு செய்யும் தர்மத்தில் மனிதன் இயற்கையிலேயே விளம்பரம் தேடுவான். நாலு பேருக்குத் தெரியும் வகையில் தான் வழங்குவான் உறவினர்களுக்கு வழங்கும்போது விளம்பரம் தேடுவது மிகவும் குறைவாக இருக்கும்.
இவனோ, இவனது தாயோ, தந்தையோ ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் உறவினர்களிடம் ஏதாவது ஒரு வகையில் உதவி பெற்றிருக்கக்கூடும். அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் கடமையும் இதனால் நிறைவேறுகின்றது.
உறவினர்களுக்கு வழங்கும் வழக்கமுடையவன் நாலனா, எட்டனா என்று வழங்க மாட்டான். அதில் அவனையும் அறியாமல் தாராளத் தன்மை ஏற்படும் யாரெனத் தெரியாதவர்களிடம் இவ்வாறு தாராளம் காட்டுவதில்லை.
யாரெனத் தெரியாதவர்களிடம் உதவி கேட்டு வருபவன் இன்னும் பலரிடம் செல்லக்கூடும் ! என்ற தர்மம் செய்பவன் நினைப்பதால் தர்மத்தை சுருக்கி விடுகிறான். உறவினர்களுக்கு நாம்தானே கொடுத்தாக வேண்டும் என்று நினைப்பதால் அந்த நினைப்பு தாராளமாகவே வழங்க அவனைத் தூண்டுகிறது.
கடவுளையும், மனிதனையும் நினைக்கும் முஸ்லிம்கள் பல்லாயிரம் மடங்கு வாரி வழங்குவதை நடைமுறையிலும் நாம் காண்கிறோம் . தன்னுடைய செல்வம் இறைவனால் தரப்பட்டது. அவனது கட்டளைப்படி வாரி வழங்குவது தனது கடமை என்று முஸ்லிம்கள் நம்புவதே இதற்குக் காரணம்
ஏழைகளுக்குச் செய்யும் தர்மம், தர்மம் மட்டும் தான் உறவினர்களுக்கு வழங்கும் தர்மம், தர்மமும் உறவினர்களை அனுசரித்தலும் ஆகும் என்பது நபிமொழி.
தந்தையை இழந்து நாதியற்று நிற்கும் அனாதைகளுக்காகச் செலவிடுவதை இரண்டாவதாக இவ்வசனம் கூறுகின்றது.
அனாதைகளுக்கு வழங்குதல் என்றால் அவர்களுக்கு ஐந்தோ , பத்தோ வழங்குவது மட்டும் தான் என்று புரிந்து கொள்ளக் கூடாது . மாறாக அனாதைகளை தம் சக்திக்கேற்ப பொருப்பேற்றுக்கொள்வது தான் சிறந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் இனைத்துக்காட்டி ; நானும் அனாதையைப் பொருப்;பேற்றவனும் இப்படி (மறுமையில்) இணைந்திருப்போம்' என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : ஸஹ்ல் (ரலி) அவர்கள்நூல்கள் : புகாரி, அபூதாவூத்
நான்கு பிள்ளைகள் உள்ள ஒருவர் தனக்குச் சக்தியிருந்தால் ஐந்தாவதாக ஒரு அனாதையையும் தன் பிள்ளை போல் வளர்த்து வந்தால் நபிகள் நாயகத்துடன் நெருக்கமாக இருக்கும் பாக்கியம் கிடைக்கின்றது என இஸ்லாம் கூறுகின்றது.
தந்தை உயிரோடு இருந்தால் நாம் இப்படி ஆகியிருப்போமா என்று எண்ணி எண்ணி ஏங்கும் அனாதைகளின் துயர் துடைப்பது தான் நன்மையே தவிர திசைகளை நோக்குவது அல்ல என்பதை இவ்வசனம் அழுத்தமாகக் கூறுகின்றது.
மூன்றாவது ஏழைகளுக்கு வழங்குவதை இவ்வசனம் குறிப்பிடுகின்றது. இந்த இடத்தில் மூலத்தில் மிஸ்கீன் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.
ஒரு கவள உணவு , இரண்டு கவள உணவுகள் யாரை விரட்டுகின்றதோ அவன் மிஸ்கீன் அல்லன் . தனது வாழ்க்கைக்குப் போதுமான செல்வம் இல்லாதவனே மிஸ்கீன் ஆவான் என்பது நபிகள் நாயகத்தின் விளக்கம்.அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல்கள் : புகாரி, முஸ்லிம்
ஒரு வேளைச் சோற்றுக்காக வீடு வீடாக யாசிக்கக் கிளம்புபவனை இங்கே கூறாமல் யாரிடமும் யாசிக்காமல் போதிய வருமானமின்றி இருப்பவனை இவ்வசனம் கூறுகின்றது
நூறு ரூபாய் தேவையுடையவனுக்கு தொண்ணூறு ரூபாய் தான் வருமானம் கிடைக்கிறது என்றால் அவன் மிஸ்கீன் - ஏழை. அத்தைகையோர் கிடைக்கும் கஞ்சியைக் குறைத்துக் கொள்வார்களே தவிர யாரிடமும் யாசிக்க மாட்டார்கள். இத்தகையோருக்கு தர்மம் செய்து பற்றாக்குறைய நிவர்த்திக்கச் சொல்கிறது இஸ்லாம்.
மிஸ்கீன் என்பவன் யாரிடமும் யாசிக்க மாட்டான் என்றால் எப்படி அவனுக்கு தர்மம் செய்ய முடியும் ? தர்மம் செய்பவன் தானாக விசாரித்து தேடிச்சென்றுதான் வழங்க முடியும் நம்மிடம் கேட்டு நம் கதவைத் தட்டுவார்கள் என்று காத்திராமல் மக்களுடன் பழகி அவர்களின் நிலையை அறிந்து உதவுவது இங்கே மறைமுகமாக உணர்த்தப்படுகின்றது.
இஸ்லாம் என்பது சடங்குகளின் தொகுப்பன்று வறியவர்களைத் தேடிச்சென்று வாரி வழங்குவதே இஸ்லாம் என்பதை இவ்வசனம் கூறுகின்றது.
இவ்வசனத்தில் நான்காவதாக வழிப்போக்கர்கள் கூறப்படுகின்றனர்; உள்ளூரில் வசதிமிக்கவர்களாக இருந்தாலும் வெளியூர் பயணம் சென்றிருக்கும்போது திக்கற்ற நிலையை அடைந்தோர் வழிப்போக்கர் எனப்படுகின்றனர்.
நாணயங்கள் பயன்படுத்தப்படும் இன்றைய நிலையில் வழிப்போக்கர்களின் நிலையை உணரமுடியாது . பண்டமாற்று முறை மட்டும் அமுலில் இருந்த காலத்தில் எவ்வளவு வசதி படைத்தவரானாலும் வெளியூரில் சிரம பட்டே ஆகவேண்டும் . பல நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களும் இராது. இத்தகைய காலத்தில் எவ்வளவு பெரிய செல்வந்தனும் வெளியூரில் ஏழையின் நிலையில் தான் இருப்பான்.
இதனால் தான் வெளியூரிலிருந்து வரும் அறிமுகமற்றவர்களையும் இஸ்லாம் விருந்தாளிகள் என்கிறது. இவ்வாறு வரக்கூடியவர்களுக்கு மூன்று நாட்கள் வரை உணவிட்டு உபசரிப்பதை இஸ்லாம் வலியுருத்தியது. அன்றைய நிலையில் இவ்வாறு உபசரிக்காவிட்டால் வழிப்போக்கன் செத்து மடிய வேண்டும்.
ஒரு ஊராரிடம் மூஸா (அலை) கிள்று (அலை) ஆகியோர் சென்றபோது அவ்வூரார் விருந்தளிக்க மறுத்தனர். இதை மூஸா (அலை) அவர்கள் பெரிய குற்றமாகக் கருதியதும் இந்தக் காரணத்தால் தான்.
இன்று ஏழைகள் மட்டுமே வழிப்போக்கர்களாக இருக்க முடியும் அல்லது பணத்தைப் பறி கொடுத்தவர்கள் மட்டுமே திக்கற்றவர்களாக இருக்க முடியும்.
ஐந்தாவதாக யாசிப்போரைப் பற்றி இறைவன் கூறுகிறான்.
யாசித்து வருபவன் தான் பொருளாதாரத்தில் மிகவும் அடிமட்டத்தில் இருப்பவன் என்று மக்கள் நினைக்கின்றனர். ஓரளவு அது உண்மையாகக் கூட இருக்கலாம். அவ்வாறிருந்தும் யாசிப்போரை ஐந்தாவது நிலையில் இஸ்லாம் கூறுவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
இஸ்லாம் வரிசைப படுத்தக் கூடிய முந்தைய நான்கு பிரிவினர்கள் முறையாக கவனிக்கப் பட்டால் யாசிப்போர் என்று யாருமே இருக்க மாட்டார்கள். ஒவ்வொருவரும் தத்தமது உறவினர்களில் உள்ள ஏழைகளைக் கவனித்துக் கொண்டால் பற்றாக்குறை உள்ளவர்களைத் தேடிச்சென்று அதை நிவர்த்தி செய்தால் அனாதைகளின் வாழ்க்கைக்குப் பொருப்பேற்றுக் கொண்டால் வழிப்போக்கர்களின் நிலையறிந்து உதவி வந்தால் யாசிப்பதற்கு எவரும் இருக்க மாட்டார்கள்.
இந்த நான்கு நிலைகள் தான் ஒருவனை யாசிக்கும் நிலைக்குத் தள்ளி விடுகின்றன. யாசிக்கின்றவர்கள் எவராக இருந்தாலும் வசதிமிக்க உறவினர்களால் அவர்கள் கவனிக்கப்படாமல் இருப்பார்கள். அல்லது தமது வாழ்க்கையை நடத்துவதற்குப் போதிய வருமானமில்லாது மற்றவர்களால் கவனிக்கப்படாமல் விடப்பட்டிருப்பார்கள். அல்லது ஆதரிப்போர் இல்லாத அனாதைகளாக இருப்பார்கள் அல்லது வழிப்போக்கராக வந்த இடத்தில் ஏற்பட்ட கஷ்டம் யாசிக்கத் தூண்டி இருக்கும். இந்நான்கு காரணங்களையும் களையுமாறு இஸ்லாம் கூறுகின்றது.
இந்நான்கு காரணங்களும் களையப்பட்ட பின்னரும் ஒருவன் யாசிக்க வருகிறான் என்றால் அவன் பொருளாதாரத்தை உழைக்காமல் அதிகம் திரட்டவே யாசிக்கிறான். இத்தகையோர் கடைசி நிலையில் வைக்கப்பட வேண்டியவர்கள் தாம் என்பதை அறிவுடையோர் மறுக்க மாட்டார்கள்.
யாசித்து வருவோரை விரட்டாதீர்கள் (93:10) என்று அல்லாஹ் கூறினாலும் யாசிப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்பது தான் இஸ்லாம் காட்டும் வழி
நபிகள்ட நாயகம்(ஸல்)அவர்கள் உருவாக்கிய சமுதாயம் யாசிப்பதற்குரிய எல்லா தகுதிகளும் இருந்தும் எந்நிலையிலும் யாரிடுமும் யாசித்ததில்லை.
பூமியில் நடமாடி(த் தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பனித்தக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களின் சுயமரியாதையைக் கண்டு அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான். அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம் . அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள். இத்தகையோருக்கு நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அதை நிச்சயமாக அல்லாஹ் அறிகின்றான். அல்குர்ஆன் 2:273
யாசித்து வருவோருக்குக் கொடுக்க வேண்டும் என்று செல்வந்தர்களுக்குக் கட்டளையிடும் இஸ்லாம் யாசித்து வருவதையும் தடுக்கின்றது.
தவிர்க்கவே முடியாத தேவைக்காக யாசிப்பதையும் ஆட்சியாளரிடம் யாசிப்பதையும் தவிர மற்ற யாசகங்கள் மனிதன் தனது முகத்தில் போட்டுக்கொள்ளும்(அவமானச்) சின்னமாகும் என்பது நபிமொழி.
இது போன்ற காரணங்களுக்காக யாசிப்போர் ஐந்தாவதாக இங்கே குறிப்பிடப் படுகிறார்கள்.
ஆறாவதாக அடிமைகளை விடுவிப்பதற்கும் பொருளாதாரத்தைச் செலவிட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இன்றைக்கு அடிமைகள் உலகில் எங்குமே இல்லை. என்பதால் இதற்கு விளக்கம் தேவை இல்லை என்றாலும் அடிமைகள் முற்றாக இல்லாமல் போனதற்கு இவ்வசனங்களும் இன்னபிற வசனங்களும் அடிமைகளை விலைக்கு வாங்கி விடுவிக்குமாறு ஆர்வமூட்டியதே காரணமாகும். இதை நினைவில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வையும் நியாயத் தீர்ப்பு நாளையும் நம்புதல் பொருளாதாரத்தை மேற்கண்ட வழிகளில் செலவிடுதல் ஆகியவற்றுடன் நன்மை முற்றுப் பெறவில்லை. இன்னமும் இருக்கின்றது என்று இவ்வசனம் தொடர்ந்து கூறுகின்றது.
அல்லாஹ்வையும், நியாயத் தீர்ப்பு நாளையும் நம்பி, வாரி வழங்கி தொழுகையை நிலைநாட்டுவதுடன் நன்மைகள் முடிந்து விடுவதில்லை. மனிதனுக்குப் பயனளிக்கத் தக்க நற்பண்புகளையும் நன்மைகளின் பட்டியலில் இறைவன் இடம் பெறச் செய்துள்ளான்.
நன்மை என்பது - தொழுகையை நிலைநாட்டுதலும் ஜகாத் வழங்குதலும் என்று இதைத் தொடர்ந்து இறைவன் கூறுகிறான்.
தொழுகையை நிலைநாட்டுதல் பற்றி முன்னர் விளக்கியுள்ளோம். ஜகாத் என்பது ஒரு முஸ்லிம் தனது சொத்தக்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தை கட்டாயமாக வழங்க வேண்டிய கடமையாகும்.
ஏற்கனவே வாரி வழங்குவதைப் பற்றிக் கூறிவிட்டு ஜகாத் என்பதை ஏன் இறைவன் கூற வேண்டும் ? அதற்கும் நியாயமான காரணம் உள்ளது.கால்நடைகளில் இத்தனை சதவிகிதம் , தாவரங்களில் இத்தனை சதவிகிதம் அவற்றைத் தவிர ஏனையவற்றில் இரண்டரை சதவிகிதம் என்ற கணக்குப்படி வழங்க வேண்டியது. ஜகாத் இதுபற்றி தனியாக இறைவன் கூறுவதால் இதற்கு முன்னர் கூறப்பட்டவைகள் ஜகாத் அல்லாமல் - அதைவிட அதிகமாக - மன விருப்பத்துடன் செய்ய வேண்டிய இறைவனது அன்பையும் நியாயத் தீர்ப்பு நாளின் பரிசையும் எதிர் பார்த்துச் செய்கின்ற தர்மத்தை தான் என்பதை அறியலாம்.
கடமையாக்கப்பட்ட அளவுடன் தர்மத்தை நிருத்திக் கொண்டால் அது முழுமையான நன்மையாகாது. மாறாக ஜகாத் எனும் கட்டாயக் கடமையான தர்மத்தை வழங்குவதுடன் மேலும் அதிகமாக மேற்ச் சொன்னவர்களின் நலனுக்காகச் செலவிடுவதே முழுமையான நன்மையாகும் . இதனால் இரண்டையும் தனித்தனியாக இறைவன் கூறுகிறான்.
தொழுகை, நோன்பு போன்ற - இறைவனை நினைவு கூறுகின்ற வணக்கங்களைக் கட்டாயக் கடமையாக்கிய மனிதனை நினைவு கூறக்கூடிய தர்மத்தையும் கடமைகளில் ஒன்றாக ஆக்கி விடுகின்றான். இத்தகைய அர்த்தமுள்ள மார்க்கம் இஸ்லாம் தவிர ஏதுமில்லை
என்பதற்கு இது சரியான சான்று.