~~~ அர்த்தமுள்ள இஸ்லாம் ~~~

Sunday, September 10, 2006

நோன்பு

அர்த்தமுள்ள இஸ்லாம்
அல்லாஹ் கூறுகிறான் உங்கள் முகங்களை கிழக்குத் திசையிலோ, மேற்குத் திசையிலோ திருப்புவதில் நன்மையில்லை. மாறாக நன்மை என்பது அல்லாஹ்வையும், இறுதி நாளையும் வானவர்களையும் வேதத்தையும், நபிமார்களை நம்புவதும் செல்வத்தில் விருப்பமிருந்து உறவினர்களுக்காகவும், அனாதைகளுக்காகவும், வழிப்போக்கர்களுக்காகவும், யாசிப்போருக்கும், அடிமைகளை விடுவிப்பதற்காக வழங்குவதும் தொழுகையை நிலைநாட்டுவதும் ஜகாத் கொடுப்பதும் ஒப்பந்தம் செய்தால் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதும் வறுமையின் போதும் துன்பத்தின்போதும் போரின்போதும் பொறுமையுடனிருப்பதும்தான். ( இவற்றைக் கடைபடித்த அவர்கள் தாம் உண்மையுரைத்தவர்கள் . இவர்கள் தாம்(இறை) அச்சமுடையவர்கள். அல்குர்ஆன் 2 : 177
சடங்குகள், மூடநம்பிக்கைகள் மற்றும் அர்த்தமில்லாத கேளிக்கைகளின் தொகுப்பே மதங்கள் என்ற நம்பிக்கை என பகுத்தறிவாளர்கள் , சிந்தனையாளர்கள் மற்றும் அறிவுஜீவிகள் ஆகியோரிடம் ஆழமாகப் பதிந்துள்ளது . இஸ்லாம் தவிர ஏனைய மார்க்கங்களைப் பொறுத்தவரை இவர்களின் இந்த முடிவு சரியானது என்பதில் சந்தேகமில்லை. ஏனைய மதங்களை ஆராய்ந்து விட்டு இஸ்லாத்தையும் அவற்றைப் போல் கருதி இஸ்லாத்தை அறியாத ஒரு சில முஸ்லிம்களின் தவறான நம்பிக்கைகளையும் பார்த்து விட்டு இவ்வாறு முடிவு செய்து விட்டனர். இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்து கொண்டால் தமது முடிவு தவறு என்பதை உணர்வார்கள்.
இந்த வசனம் இஸ்லாத்தைப் பற்றித் தவறான நம்பிக்கை கொண்டவர்களுக்கும், இஸ்லாத்தின் மேல் ஆட்சேபனை எழுப்பக் கூடியவர்களுக்கும் தெளிவான பதிலைக் கூறுவதுடன் இஸ்லாத்தில் இல்லாத சடங்குகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வரும் முஸ்லிம் பெயர் தாங்கிகளுக்கும் சரியான மறுப்பாக அமைந்துள்ளது.
இஸ்லாம் என்பது மனிதநேயம் மிக்க மார்க்கம், நற்பண்புகளை மனிதர்களிடம் வளர்ப்பதற்காக வழங்கப்பட்ட மார்க்கம், சடங்குகள் போன்று தோற்றமளிக்கும் மிகச்சில காரியங்கள் இஸ்லாத்தில் இருந்தாலும் அதன் நோக்கம் மனிதனைப் பக்குவப்படுத்துவதுதான் . என்பதையெல்லாம் இந்த வசனம் மிகத் தெளிவாக எடுத்துறைக்கின்றது. எனவே இவ்வசனத்தை மிகவும் விரிவாக நாம் அறிந்து கொள்வோம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்தபோது கஃபா ஆலயத்தை நோக்கித் தொழுகை நடத்தி வந்தனர். பின்னர் மதீனா நகருக்கு வந்ததும் ஜெரூசலமில் உள்ள பைத்துல்முகதஸ் எனும் ஆலயத்தைநோக்கித் தொழுகை நடத்தலானார்கள்.. கஃபாவை நோக்கியே தொழுகை நடத்துமாறு இறைவன் கட்டளையிட்டதும் மீண்டும் கஃபாவை நோக்கித் தொழலானார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் திசையை அடிக்கடி மாற்றி வந்தது யூதர்களாலும் மற்றவர்களாலும் குறை கூறப்பட்டு வந்தது.
பைத்துல்முகத்தஸை நோக்கித் தொழுத காலகட்;டத்தில் ' முஹம்மது தனது முன்னோர்களின் தொழும் திசையை மாற்றி விட்டார் ' என்று மக்கா நகர் வாசிகள் குறை கூறினார்கள். ' பல நபிமார்கள் தொழும் திசையாகக் கருதி வந்த பைத்துல்முகத்தஸை முஹம்மத் மதிக்க வில்லை' என்று யூதர்கள் விமர்சனம் செய்தனர்.
திசைகளில் தான் நன்மை இருக்கிறது என்ற மூடநம்பிக்கையைத் தகர்த்து எது நன்மை என்பதை இவ்வசனம் விளக்குகிறது.
மனிதன் இவ்வுலகில் வாழும்போது நேர்மை, தானம், தர்மம், வீரம் போன்ற பண்புகளை கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்பதே இஸ்லாத்தின் அடிப்படை அந்த நற்பண்புகளைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கான பயிற்சியே இஸ்லாத்தில் வலியுருத்தப்பட்ட வணக்க வழிபாடுகள் என்பது இவ்வசனத்தின் சாரம்.
நோன்பு என்றொரு கடமை இஸ்லாத்தில் வலிருயுத்தப் பட்டுள்ளது. உண்ணுதல் , பருகுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகியவற்றைப் பகல் காலங்களில் விட்டு விடுவது நோன்பு எனப்படுகின்றது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது மனிதன் தன்னைத்தானே வருத்திக்கொள்வது போல் நோன்பு தோற்றமளித்தாலும் நோன்பின் நோக்கம் அதுவன்று .
மூமீன்களே ! நீங்கள் இறையச்சமுடையோராகத் திகழ்வதற்காக உங்களுக்கு முன்னிருந்தோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆன: 2:183
மனிதனை வதைப்பது நோன்பின் நோக்கமன்று மாறாகப் படைத்த இறைவனுக்காக இவ்வாறு சிறிய தியாகம் செய்து பயிற்சி பெற்ற ஒருவன், அதே இறைவன் வலியுறுத்தும் ஏனைய நற்பண்புகளைத் தன் வாழ்வில் கடைபிடிப்பான். கடைபிடிக்க வேண்டும் என்பதே நோன்பின் நோக்கம்.
தனக்கு உரிமையான உணவை இறைவன் தவிர்க்கச் சொல்கிறான் என்பதற்காக தியாகம் செய்ய முன்வருபவன், தனக்கு உரிமையில்லாத பொருட்களைப் பிறரிடமிருந்து திருடி, கொள்ளையடித்து லஞ்சம் வாங்கி , மோசடி செய்து பறித்துக் கொள்ளத் துனிய மாட்டான். இந்தப் பயிற்சியைப் பெறாமல் ஒருவன் காலமெல்லாம் பட்டினி கிடந்தாலும் இறைவனிடம் அதற்கு எந்த மதிப்பும் இல்லை என்பது இஸ்லாத்தின் தீர்மானமான முடிவு.
யார் பொய் பேசுவதையும் , தீய செயல்களையும் விட்டு விட வில்லையோ அவன் தண்ணீரையும், உணவையும் விட்டு விடுவதில் இறைவனுக்கு எந்தத் தேவையுமில்லை என்பது நபிமொழி
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத், அபூதாவூத் , திர்மிதி, இப்னுமாஜா
மாபெரும் இலட்சியத்தை அடைவதற்கான பயிற்சியே நோன்பு என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறியலாம்.

0 Comments:

Post a Comment

<< Home