~~~ அர்த்தமுள்ள இஸ்லாம் ~~~

Sunday, September 10, 2006

தொழுகை

தினமும் ஐவேளைத் தொழ வேண்டும் என்று இஸ்லாத்தில் வலியுருத்தப் பட்டுள்ளது. இத்தொழுகையில் நின்று, குனிந்து, சிரம் பனிந்து அமர்ந்து இறைவன் துதிக்கப்படுகிறான். இறைவன் மிகப்பெரியவன் நான் அவனது கட்டளைக்குக் கட்டுப்பட்ட சிறியவன் என்ற பயிற்சியை மனிதன் இதன் மூலம் பெறுகிறான்.
இதனால் மனித சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்ன ? ஏராளமாக உள்ளன.
மனிதன் மானத்துடனும், ரோஷத்துடனும், சுயமரியாதையை இழக்காமலும் வாழவேண்டும் என்று அறிவுடையோர் எதிர்பார்க்கின்றனர். இந்த சுயமரியாதைக்காகவே பல இயக்கங்கள் தோன்றியுள்ளன.
மனிதனைவிட எல்லா வகையிலும் குறைந்த நிலையிலுள்ள ஆகாயம், சூரியன், சந்திரன், நெருப்பு, கற்கள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றுக்கு முன் மனிதன் மண்டியிட்டு வணங்கும்போது சுயமரியாதையை இழந்து விடுகிறான். தன்னைவிடத் தாழ்ந்தவற்றுக்கு முன் இவன் தாழ்ந்து விடுகிறான். தனக்கு சமமான தன்னைப்போலவே ஆசாபாசங்கள் உள்ள - தன்னைப்போலவே பலவீனங்கள் நிறைந்த - மலஜலத்தை சுமந்திருக்கக் கூடிய இன்னொரு மனிதன் முன்னால் மண்டியிடும் போதும் மனிதன் தனது சுயமரியாதையை இழந்து விடுகின்றான்.
இவற்றை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த சுயமரியாதைக்காரர்களும் கூட இன்னொரு வடிவில் சுயமரியாதையை இழந்து நிற்கும் பரிதாப நிலையைப் பார்க்கின்றோம். கல்லுக்கு பூஜை செய்யலாமா ? அவற்றால் அதை உணர முடியுமா ? என்றெல்லாம் கேள்வி கேட்டவர்கள் இன்னொரு கல்லுக்கு - பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர் என்றோ செத்து விட்ட பெரியார் இதை உணர முடியுமா ? என்பதைச் சிந்திக்க மறந்து விட்டனர். சிலைகள் தான் மாறிவிட்டனவே தவிர சிலை வணக்கம் மாறவில்லை.
ஆக அனைவரும் சுயமரியாதையை வந்த விலைக்கு விற்றுக்கொண்டு தான் உள்ளனர். விற்கும் சந்தை தான் மாறியுள்ளதே தவிர விற்பனை நின்றதாகத் தெரியவில்லை.
அல்லாஹ் மட்டுமே பெரியவன் என்று ஐங்காலத் தொழுகைகள் பயிற்சி பெற்றவன், தன்னை விட உயர்ந்தவனான இறைவன் முன்னிலையில் மட்டும் தான் சிரம் தாழ்த்துவான். வேறு எந்தச் சக்தியின் முன்னேயும் தலை தாழ்த்த மாட்டான். இதனால்தான் பதிநான்கு நூற்றாண்டுகளாக உண்மை முஸ்லிம்கள் எந்தச் சக்திக்கும் அடிபணியாமல், எவர் முன்னேயும் சிரம் தாழ்த்தாமல் இன்றுவரை சுயமரியாதையோடு, கம்பீரமாக நடைபோட்டு வருகின்றனர்.
தொழுகையின் மூலம் அல்லாஹ்வுக்கு முன்னால் மட்டும் ஒருவன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும்போது வேறு எவர் முன்னிலையிலும் தன்னைத் தாழ்த்தக் கூடாது என்ற உறுதியைப் பெறுகிறான்.
மேலும் தொழுகையில் இறைவனது வல்லமையில் நினைவு கூர்ந்து அவனைப் போற்றிப் புகழ்வதால் இறைவனைப் பற்றிய அச்சம் அதிகரிக்கின்றது இவ்வுலகில் நல்லவனாக வாழச் செய்கின்றது. குனிந்து நிமிர்ந்து சிரம் பணிந்து தொழுது விட்டு எல்லா அக்கிரமங்களிலும் ஒருவன் ஈடுபட்டு வந்தால் அத்தொழுகை;கு இறைவனிடம் எந்த மதிப்பும் கிடையாது.
நிச்சயமாக தொழுகை தீயவைகளை விட்டும் தடுக்கின்றது.
தீமைகளை விட்டும், மானக்கோடானவற்றை விட்டும் தடுப்பதற்கான பயிற்சியே தொழுகை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம். இந்தப்பயிற்சியை ஒருவன் பெறவில்லையானால் அவனது தொழுகை, இறைவன் பார்வையில் தொழுகையே இல்லை என்பதையும் இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

0 Comments:

Post a Comment

<< Home